முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி முடிவெடுத்துள்ளன.
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா உயிர் அச்சுறுத்தல்கள் – அழுத்தங்களால் பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலைமை ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தையும் பின்னர் முல்லைத்தீவை முடக்கும் போராட்டத்தையும் நடத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடந்த சந்திப்பிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.
இதில், இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், எம். ஏ. சுமந்திரன் எம். பி., வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், கலைய முதன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் சார்பில் அதன் தலைவரான த. சித்தார்த்தன் எம். பி, பா. கஜதீபன், ரெலோ கட்சியின் சார்பில் தி.நிரோஷ், ஈ.பி. ஆர். எல். எவ் சார்பில சுரேஷ் பிறேமச்சந்திரன், சர்வேஸ்வரன், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் என்.சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
நீதிபதிக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களை ஏற்படுத்தி அவரை பதவி துறக்கவும் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலைமை ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் புதன்கிழமை – ஒக்ரோபர் 4ஆம் திகதி மிகப்பெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.
மருதனார் மடத்திலிருந்து யாழ்ப்பாணம் நகரம்வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இதைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தை முடக்கிப் போராடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. எனினும், இந்தப் போராட்டம் எப்போது என்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விடயத்தை ஐ. நா. மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்றும் இதற்காக அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் கையொப்பமிட்டு அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் கடிதம் அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.