நீதித்துறை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகல் குறித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிப் பதவி உள்ளடங்கலாக நீதித் துறையிலே தான் வகித்த அனைத்துப் பதவிகளையும் அரசியல் ரீதியான அழுத்தங்களின் காரணமாகவும், உயிர் அச்சுறுத்தலின் காராணமாகவும் இராஜினாமாச் செய்துவிட்டு, இலங்கையிலே வாழ முடியாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நீதிபதி ரீ. சரவணராஜா அவர்கள் இன்று எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி ஜனநாயகத்தினையும், நீதியினையும் மதிக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதுடன், இலங்கையின் நீதித் துறையின் சுயாதீனத் தன்மை எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவாக வெளிக்காட்டுகிறது.
நீதிபதி சரவணராஜா அவர்கள் குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்களத்தினால் சிங்கள பௌத்தத் தேசியவாத நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட மீறல்களை வெளிப்படையாக கண்டனம் செய்து, நியாயமான தீர்ப்புக்களை வழங்கிய ஒரு நீதிபதி ஆவார். தமிழ் மக்களின் நினைவேந்தல் செயற்பாடுகளுக்கு அரசினால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம் மக்களின் நினைவேந்தல் உரிமையினை உறுதிப்படுத்தித் தீர்ப்புக்களை வெளியிட்ட ஒருவர். இவ்வாறான நேர்மையும், துணிச்சலும் மிக்க நீதிபதியினை அச்சுறுத்தும் வகையில் தென்னிலங்கையில் உள்ள தீவிர சிங்கள தேசியவாத சக்திகள் வெறுப்புப் பிரசாரங்களை அண்மையிலே முன்னெடுத்திருந்தனர். கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நீதிபதியினை மிகவும் மோசமான முறையில் விமர்சித்தும் அச்சுறுத்தியும் இருந்தார்.
நீதிபதி சரவணராஜா தனது இராஜினாமாக் கடித்தத்திலே தனது உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்தும், தாம் எதிர்நோக்கிய அழுத்தம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 21 செப்டெம்பர் 2023 அன்று சட்டமா அதிபர் நீதிபதி சரவணராஜாவினை சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அழைத்ததாகவும், அந்த சந்திப்பிலே குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலே நீதிபதி சரவணராஜா வழங்கிய தீர்ப்புக்களை மாற்றியமைக்கும்படி நீதிபதியின் மீது ஆலோசனை என்ற வடிவத்திலே அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் ஊடகங்களிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சட்டத்திற்கு அமையத் தன் கடமைகளைச் செய்த ஒரு நீதிபதிக்கே இந்த நிலைமை ஏற்படின், நாளாந்தம் இனவாத செயன்முறைகளை எதிர்கொண்டு போராடும் நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் நிலைமை என்ன என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது.
நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக இடம்பெற்ற வெறுப்புப் பிரசாரங்கள், அச்சுறுத்தல்கள், அவரது பணியினை அவர் சுயாதீனமாகச் செய்வதனைத் தடுக்கும் வகையில் அவரின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் அனைத்தினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த முயற்சிகளில் ஈடுபட்ட அனைவரும் நீதிபதி சரவணராஜா இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பிலே பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படல் வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோருகிறது.
வடக்குக் கிழக்கின் நீதிக் கட்டமைப்பு இன்று அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் சந்தித்து வருகிறது. வடக்குக் கிழக்கில் பணியாற்றும் நீதிபதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு அடிப்படையான காரணமாக அமைவது இலங்கை அரசினது சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலே. தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தப் பிரதேசத்தினை சிங்கள பௌத்த மயமாக்குவதும், தமிழ் மக்களின் நினைவேந்தல் செயன்முறைகளை வலிந்து தடுத்தலும் இந்த நிகழ்ச்சி நிரலின் பகுதிகளாகும். இந்த நிகழ்ச்சி நிரலிற்குத் துணை போகாத நீதிபதிகளும், ஏனைய அரச ஊழியர்களும் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலுக்கும், அழுத்தத்துக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகின்றனர். சிங்கள பௌத்த மேலாதிக்கம் ஒழியும் வரை வடக்குக் கிழக்கிலே நீதித் துறையும் சரி ஏனைய நிருவாகத் துறைகளும் சரி பாதிப்பினையே எதிர்கொள்ளும். எனவே, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை எதிர்த்து, நாட்டின் எல்லா சமூகங்களும் சமத்துவமான முறையிலே வாழ்வதனை உறுதிப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான அணி திரட்டலிலே நாட்டின் எல்லா முற்போக்கு சக்திகளும் இன, மத, பிராந்திய பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்.
நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி ஒன்றிலே அகப்பட்டிருக்கும் இன்றைய நிலையில், இனவாதத்தினைக் கையில் எடுக்கும் அரசியல் சக்திகள் மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து அவர்களைத் திசைதிருப்பிவிட முயற்சி செய்கின்றனர். நீதிபதி சரவணராஜா போன்றோர் இலக்கு வைக்கப்படுவது இந்த இனவாத முயற்சியின் ஒரு வடிவமே. அரசாங்கத்தினதும், சிங்கள மேலாதிக்க சக்திகளினதும் இந்தத் தந்திரோபாயத்தினை விளங்கிக் கொண்டு இனவாதத் தரப்புக்களையும், மக்களின் நலனிலே அக்கறை அற்ற இந்த அரசாங்கத்தினையும் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கும் நீதிபதி சரவணராஜா மீளவும் தன் பதவிக்குத் திரும்பி, சுயாதீனமான முறையில் தனது கடமைகளைச் செய்யக் கூடிய நிலையினை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்; நீதித் துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்; வடக்குக் கிழக்கிலே நீதித் துறையும், நீதிபதிகளும் எதிர்கொள்ளும் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்; இந்த அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிநாதமாக இருக்கும் அரசாங்கத்தினதும், சிங்கள பௌத்த மேலாண்மைவாத சக்திகளினதும் இனவாதம் முறியடிக்கப்பட வேண்டும்; இந்த நோக்கங்களுக்காக நாட்டு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது.
தலைவர்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்