தாதியின் தேசிய அடையாள அட்டையை திருடிய குற்றச்சாட்டில் மற்றொரு தாதி பாணந்துறையில் கைது!

editor 2

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை களவாடி அவரது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் தாதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி 2,000 ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தமது பணப்பை வேலை செய்யும் இடத்தில் காணாமல் போனதாக குறித்த சிகிச்சைப் பிரிவில் தொழில் புரிந்து வரும் தாதி ஒருவர் பாணந்துறை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பாணந்துறையில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து முறைப்பாடு செய்த தாதிக்கு, “நீங்கள் வாங்கிய கடனுக்கான தவணை சரியாக செலுத்தப்படவில்லை எனவும், அதனை செலுத்துமாறும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அதே பிரிவில் தொழில் புரியும் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் இன்று (27) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This Article