ஹர்தீப் சிங் நிஜ்ஜார்: கனடாவின் குடிமகன்! சீக்கியர்களின் போராளி! இந்தியாவின் பயங்கரவாதி!

editor 2

கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை கனடா-இந்தியா உறவில் உச்சக்கட்ட முறுகலை தோற்றுவித்துள்ளது. அவர் கனடாவின் குடிமகனாக, சீக்கியர்களின் போராளியாக, இந்தியாவின் பயங்கரவாதியாக அவரவர் பார்வைக்கு புலப்படுகின்றமை தொடர்பில் ஈழநாடு நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதனை வாசகர்களுக்காக தருகிறோம்,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசின் முகவர்களுக்கும், கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா புலனாய்வு துறைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறியுள்ளார். கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நிய வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் அழுத்திக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரூன் மெக்கேவை 19.09.2023 அன்று இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இராஜதந்திரி அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை:

இந்தியாவின் உள் விவகாரங்களில் கனேடிய ராஜதந்திரியின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனடாவில் சீக்கிய காலிஸ்தானிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டமை தொடர்பில், இந்திய ராஜதந்திரி ஒருவரை கனேடிய அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளது.

மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஹர்தீப் சிங்கின் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே ‘நம்பகமான’ தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?

கனடாவின் சுர்ரே நகரில் வசித்து வந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். அங்கு குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக செயல்பட்டு வந்த அவர், கனடாவின் குடிமகனாகவும் இருந்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அவர், காலிஸ்தான் புலி படையின் (கே.டி.எப்.) தலைவராக செயல்பட்டவர். 1997-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட்டில் கனடாவுக்கு நிஜ்ஜார் சென்றார்.

அவருடைய அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் ஒருவரை திருமணம் செய்ததும், நிஜ்ஜாருக்கான குடியுரிமையை அந்த பெண் அவருக்காக முன்மொழிந்துள்ளார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட கே.டி.எப். அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, பயிற்சி வழங்குவது போன்றவற்றில் அவர் ஈடுபட்டுள்ளார்.

2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, அப்போது பஞ்சாப் முதல்-மந்திரியாக இருந்த அமரீந்தர் சிங் அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் பெற்றது.
இதன்பின் 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் பயங்கரவாத பரவலுடன் தொடர்புடைய வழக்குகளில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி பஞ்சாப் போலீசார் கேட்டு கொண்டனர். 2007-ல் பஞ்சாப்பில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் உள்பட பல்வேறு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்துள்ளார். 2010-ம் ஆண்டு பாட்டியாலாவில் கோவில் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கிலும் அவர் மீது வழக்கு பதிவானது.

2015-ம் ஆண்டு இந்து தலைவர்களை இலக்காக கொண்டு செயல்பட்டதில் அவருக்கும் பங்கு உள்ளது என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக மற்றொரு வழக்கு பதிவானது. இந்து மத தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில், 2016-ல் மற்றொரு வழக்கு பதிவானது. 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அவருக்கு எதிராக, தேடுதல் சுற்றறிக்கை மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் ஆகியவை பிறப்பிக்கப்பட்டன.

2018-ல் பஞ்சாப்பில் நடந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் படுகொலையில் உள்ள தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியது. 2020-ம் ஆண்டு அவரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது. பஞ்சாப்பின் ஜலந்தரில், இந்து சாமியார் ஒருவரை கொல்ல சதி திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 2022-ம் ஆண்டில் அவருக்கு எதிராக ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஜி20 மாநாட்டில்

அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரத்தை எழுப்பினார். இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம். இந்தியாவின் முகவர்கள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியுள்ளனர் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு அரசின் தலையீடு

கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். இது சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

கொலையின் பின்புலம்

இந்த நடவடிக்கையை தாங்கள் கண்டிக்கிறோம் என்றும், இதை பற்றி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பேசி இருக்கிறோம்.

அத்துடன் இந்திய பிரதமரிடம் பேசி இருக்கிறோம். விரைவில் இந்த கொலையின் பின்புலத்தை வெளியே கொண்டு வருவோம்.

இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதனால் இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்திய உதவியை நிராகரித்த கனடா

இந்தியாவில் கடந்தவாரம் நடைபெற்ற பு-20 உச்சி மாநாடு கனடா விடயத்தில் எதிர்பாராத விதமாக, இன்னோர் நிகழ்வும் எதிர் விளைவுகளே உருவாகியுள்ளது. இந்தியா வந்த கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உச்சி மாநாட்டுக்குப் பின் மீண்டும் கனடா புறப்பட இருந்த நிலையில், அவர் நாடு திரும்ப இருந்த விமானத்தில், எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதனால் 36 மணி நேரமாக அவர் டில்லியிலேயே தங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், இந்திய அரசு அவருக்கு உதவ முன்வந்துள்ளது. இந்திய ஜனாதிபதி, பிரதமர் முதலானோர் பயணிக்கும் எயர் இந்தியா வன் விமானத்தில் அவர் உடனடியாக கனடா புறப்படலாம் என அவருக்கு இந்திய தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பில் கேள்வி

இதனையடுத்து ஆறு மணி நேரம் கழித்து இந்திய அதிகாரிகளுக்கு பதிலளித்த கனேடிய அதிகாரிகள், இந்தியாவின் உதவியை நிராகரித்துள்ளதுடன், தங்கள் விமானம் வந்தபிறகே, ட்ரூடோ கனடா புறப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே, இந்தியப் பிரதமர் மோடி, ட்ரூடோவிடம் இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியது, மற்றும் ட்ரூடோ இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் ஆகியவற்றால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் உதவியை கனடா ஏற்க மறுத்ததுடன், பதிலளிக்கவும் தாமதம் செய்த விடயம், இரு நாட்டு உறவுகளின் விரிசலை மேலும் அதிகரிக்கச் செய்வதுபோல் அமைந்துள்ளது.

  • ஐங்கரன் விக்கினேஸ்வரா
  • நன்றி – ஈழநாடு இதழ்
Share This Article