வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் – சிவிகே!

வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் - சிவிகே!

editor 2

வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தமிழ் கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன. இந்த எண்ணப்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்சியின் பொதுசெயலாளராக சுமந்திரனை ஏற்றுக்கொள்ளவில்லையென கூறியதில் தவறில்லை அது அவரின் கருத்து யாப்பின்படியே தெரிவு நடைபெற்றுள்ளது. இதனை தேர்தல் திணைக்களம் ஏற்றுகொண்டுள்ளது என தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர் உப தவிசாளர் நியமம் தொடர்பில் சில கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர், உப தவிசாளர்கள் நியமனங்களை அனுப்பி வைத்தார்.

இதனை உரிய நேரத்துடன் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரனுக்கு குறிப்பு எழுதி அனுப்பியிருந்தேன் அதனை அவர் பெற்றுக்கொண்டார்.

ஆனால் இதனடையே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கட்சியின் பொது செயலாளராக சுமந்திரனை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்தை தெரிவித்த போது அது யாருக்குமே அசொளகரியமாக இருந்திருக்கும் அது சுமந்திரனுக்கு ஏற்பட்டது.

என்னுடன் தொடர்பு கொண்டு என்னை செயலாளராக ஏற்கவில்லை என்றால் எவ்வாறு கையோப்பமிடுவது என்று கேட்டார்கள். இது தொடர்பில் தலைமைக்கு பிரேரிக்கப்பட்ட இருவருடன் கலந்துரையாடி கட்சியினுடைய செயலாளர் சுமந்திரன்தான் என்பதை தெரிவித்து, சுமந்திரனிடமும் கூறி கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற தெரிவுகளுக்கு ஓப்பமிட்டு தேர்தல் திணைக்களத்திடம் வழங்குமாறு கூறியிருத்தேன் அவரும் அதனை வழங்கியுள்ளார்.

இதில் ஒரு விடயத்தை கூறவேண்டும் கட்சியின் செயலாளர் தெரிவின் போது சிறிதரன் தான் அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது நியாயமானது.

ஆனால் தெரிவு நடைபெற்றமை தொடர்பில் கட்சியின் யாப்புக்கு அமையவே தெரிவு செய்யப்பட்டு தேர்தல் திணைக்களத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டு சட்டபூர்வமாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, செயலாளர் தெரிவின் போது சிறிதரன் தான் சுமந்திரனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியது உண்மையே. ஆனால் பத்து பேர் உள்ள சபையில் ஜனநாயக முறையில் ஆறு பேர் எழுபேர் ஒருவருக்கு ஆதரவு தெரிவுக்கும்போது இருவர் மூவர் எதிர்க்கலாம் அதற்காக தெரிவை பிழி என ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறமுடியாது.

இந்த தெரிவு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது ஒரு சிலருக்கு இதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம்.

அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பங்களிக்க வேண்டும் என்ற அழைப்பு விடுகின்றேன்.

இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி செய்வது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளோம். குறிப்பாக ஜனநாயக தமிழ் கூட்டணியுடன் பேசியுள்ளோம்.

அவர்கள் சிலவற்றை கோரியுள்ளார்கள் அதில் தவறில்லை பேச்சுவார்த்தை எனும்போது கோரிக்கைகள் முன்வைப்பது தவறில்லை.

அதில் மானிப்பாய், வலி கிழக்கு, சாவகச்சேரி மூன்று உள்ளூராட்சி மன்றங்களை தாம் ஆட்சி செய்வதற்கு கோரியிருந்தார்கள் இதில் வலி கிழக்கு சரிவராது அதில் 11 பேர் எங்களுடையவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு 5 பேர் இருக்கிறார்கள் என்பதால் நேரடியாகவே சாத்தியமில்லை என்பதை கூறியுள்ளோம் மற்றையவை பற்றி பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளோம்.

எது எவ்வாறு இருந்தாலும் இலங்கை தமிழரசு கட்சி மக்களால் முதன்மைபடுத்தபட்ட கட்சி என்பதால் தமிழ் கட்சிகளிடம் கோரிக்கை முன்வைக்கிறேன்.

வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி சென்றுவிடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

இதில் தமிழ் கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன இந்த எண்ணப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நிபந்தனைகள் இல்லாமல் தெரிவுகளை நடாத்தி முடிப்பதற்கும் எங்களுக்கு ஆதரவு தருமாறும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Share This Article