யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இரத்ததானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பிலான சர்ச்சையை அடுத்து பழைய மாணவர் சங்கத்தின் போசகர் பதவியிலிருந்து விலகுவதுடன் தற்போதைய பழைய மாணவர் சங்கத்துடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிப்பதாக யாழ்ப்பாண் இந்துக்கல்லூரியின் அதிபர் செந்தில்மாறன் அறிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஆண்டு தோறும் தியாகதீபம் திலீபன் நினைவேந்தலை ஒட்டியதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், கல்வித்திணைக்களம் அனுமதிக்கவில்லை என்பதால் அனுமதி வழங்கமுடியாது என்று கல்லூரி முதல்வர் பழைய மாணவர் சங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றார். குறித்த கடிதம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், ஏற்கனவே இராணுவ தளபதிகளை அழைத்து கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பிலான காட்சிகளை வெளிப்படுத்தி கல்லூரி அதிபருக்கு எதிராக பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன.
இதனிடையே கல்லூரிக்கு வெளியே பழைய மாணவர்களால், கொட்டகை அமைத்து இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில்,
இன்று கல்லூரி அதிபர் தற்போதைய பழைய மாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாகச் சாடியதுடன் அவர்களுடன் எந்தவித தொடர்புகளையும் பேணாதிருக்கத் தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளமை தொடர்பிலான கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.