போலீசாரே குற்றவாளிக்கு பிணை கொடுக்க கோரிய அவலம் – ஊடகவியலாளர் உபுல் சந்தரா

editor 2

பொத்துவில் தொடக்கம் நல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி திருக்கோணமலையில் உள்ள சர்தாபுரம் என்ற இடத்தில் சிங்கள இனவாத குழுக்களால் தாக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தாக்கப்பட்டு இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச அமைப்புகளும், தூதரகங்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கண்டனம் வெளியிட்டு வந்த நிலையில், இந்த குற்றச்செயலை புரிந்த நபர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் 19.09.2023 குறித்த நபர்களை திருக்கோணமலை நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்புக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அடையாள காட்டுவதற்காக வாதி தரப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் பாதிக்கப்பட்ட இருவர் திருக்கோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

எனினும் குறித்த தினத்தில் போலீசார் குற்றவாளிகளை அடையாள அணி வகுப்புக்கு கொண்டுவர தவறி இருந்தனர். இதனால் அடையாள அணி வகுப்பு 21.09.2023ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் (21.09.2023) அடையாள அணிவகுப்பு இடம்பெற இருந்த நிலையில் வாதி தரப்பை சேர்ந்தவர்கள், யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் செயற்பாடுகளில் பங்கு கொண்டு இருந்தமையால், நீதிமன்றத்துக்கு வருகை தரவில்லை. வருகை தராமையினால் வழக்கு எதிர்வரும் 05.10.2023 தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் வாதி தரப்பை சேர்ந்த நான்கு பேருக்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் சீனன்குடா போலீசாரால் முன்வைக்கப்பட்ட BR மற்றும் FR இடையே முரண்பாடுகள் காணப்பட்டது குறித்து,

மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்ஷினி அவர்களால் போலீசாருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. திருக்கோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்றைய தினம் 9.30 மணி முதல் 11.30 மணி வரை நீண்ட நேர இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த நீதிமன்றத்தில் ஒன்று கூடி இருந்த போலீஸ் உயர் உத்தியோகத்தர்கள் (ASP, SSP) மற்றும் பௌத்த இனவாத பிக்குகள் குழு குறித்த நபர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நெருக்கடி நிலையை உருவாக்கினர். இதனால் மதியம் 1.30 மணியளவில் திருக்கோணமலையில் சமாதான சீர்குலைவு இடம்பெறும் எனக்கோரி போலீசாரால் குறித்த வழக்கு மீள அதே தினத்தில் விசாரணைக்கு எடுக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நீதித்துறை நடவடிக்கைகளுக்கு முரணாக போலீசாரின் வேண்டுதலை “சமாதான சீர்குலைவு” என்ற அடிப்படையில் கவனத்தில் எடுத்து, நல்லெண்ண நோக்கில் நீதிபதி மீள மாலை 4.30 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அந்த சந்தர்ப்பத்தில், அந்த அதிசயம் நடந்தேறியது. குற்றவாளி தரப்பால் முன்வைக்கப்பட வேண்டிய நியாயப்பாடுகள் போலீசாராலேயே முன்வைக்கப்பட்டது. போலீசார் “குறித்த குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணம், “திருக்கோணமலையில் நாளைய தினம் குறித்த இனவாத பிக்குகளால் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படும்” ஆகும். இவ்வாறான அச்சத்தால், போலீசார் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர். இந்த நிலைப்பாடு இலங்கை சட்டத்தை பாதுகாக்க வேண்டிய போலீசாரின் நிலைமை தொடர்பில் கேள்விகளை எழுப்பி நிற்பதுடன், தமிழ், முஸ்லிம் மக்களுக்கான உரிமைகள் இந்த சட்ட மற்றும் நிறைவேற்று துறையினால் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. அதன் பின்னர் வேறு சந்தர்ப்பங்கள் இல்லாத நிலையில் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் நீதித்துறையால் குறித்த குற்றவாளிகள் மாலை 5.00 மணி அளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை நீதித்துறை மீதான நம்பிக்கையையும் முற்றிலும் இழக்கச் செய்வதுடன், இதன் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. மேலும் இவ்விடயத்தில் திருக்கோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல மற்றும் கோகன்னபுரம் பாதுகாப்பு ஒன்றியம் என்ற இனவாத பிக்குகள் குழுமத்தின் அழுத்தங்கள் நேரடியாக காணப்பட்டதை திருக்கோணமலை நீதிமன்றம் இன்றைய தினம் காட்டி நின்றுள்ளது. குறிப்பாக நீதிமன்றத்திற்குள் அளவுக்கு அதிகமாக பிக்குகள் மற்றும் இனவாத குழுக்கள் சூழ்ந்து இருந்தமை, போலீசாரின் பக்கச்சார்பான நடவடிக்கைகள் என்பன சட்ட ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்தி நிற்கின்றது.

மேலும் கடந்த திருக்கோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோகன்னபுரம் பாதுகாப்பு ஒன்றியம் அமைப்பைச் சேர்ந்த பிக்குகள் பலவந்தமாக உள்நுழைந்து, இலங்கை ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களை அவமானப்படுத்தி, பலவந்தமாக விகாரை அமைப்பதற்கான அனுமதி பெற்று சென்றிருந்தனர்.

இதுவரை குறித்த பிக்குள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அஹிம்சை வழி போராளி திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது பொது வெளியில் மிகக் கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக போலீசார் இவ்வாறு செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்க விடயம் ஆகும்.

Upul Sandara (உபுல் சந்தரா),
Journalis

Share This Article