தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வலியுறுத்தி 50 இலட்சம் பேர் கையெழுத் திட்டுள்ள படிவங்களை குடியரசு தலைவர் மாளிகையில் ம.தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ வழங்கியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு கடந்த ஜூன் 20ஆம் திகதி தொடங்கி வைத்தார்.
பின்னர், தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள், பொது மக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சியில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஈடுபட்டனர். இவ்வாறு பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை, ரயில் மூலம் டில்லிக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், இந்த கையெழுத்து படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் நேற்றுமுன்தினம் வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறியவை வருமாறு,
ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் முன்னணிஅரசியல் தலைவர்கள், 57 எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள் உட்படதமிழகத்தில் 50 இலட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் கையெழுத்து படிவங்களை ஒப்படைத்துள்ளோம்.
‘குடியரசுத் தலைவரின் பார்வைக்கு உங்கள் கோரிக்கை மனு அனுப்பப்படும். அவர் தரும் பதிலை தெரிவிக்கிறோம்’ என்று குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் உறுதி அளித்துள்ளனர் – என்றார்.