நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிஸ் மா அதிபரின் சகோதரர் அத்துமீறல்?

editor 2

பொலிஸ் மா அதிபரின் சகோதரர் என்று பொலிஸாரால் கூறப்பட்ட ஒருவர் தடைகளை மீறி நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையாக – பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் இடத்தில் காரை நிறுத்தியமை பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அவரின் இந்த அத்துமீறிய செயலுக்கு அங்கு பணியில் இருந்த பொலிஸாரும், மாநகர சபை ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கினர் என்றும் அங்கிருந்த பக்தர்கள் விசனம் தெரிவித்தனர்.

மேலும், தென்னிலங்கையை சேர்ந்தவரான அந்த நபர் காலணியுடன் ஆலய வளாக பகுதியில் நடமாடினார் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் அங்கு நின்ற பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், இந்த வாகனத்தை எந்த அடிப்படையில் அனுமதித்தார்கள் என்று பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியபோது, அங்கு நின்ற பொலிஸார், ‘அவர் பொலிஸ் மா அதிபரின் சகோதரர். அவரை எப்படி நாம் மறிப்பது என்று கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, வேறு பொலிஸார் காரின் உரிமையாளரை மீண்டும் அழைத்து வந்து அங்கிருந்து அந்த வாகனத்தை எடுப்பித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலைமை சுமூகத்துக்கு வந்தது.

இதேவேளை, நல்லூர் ஆலயத்தை சூழவுள்ள தடைப் பகுதிகளில் செல்வாக்கு படைத்த பலர் தமது வாகனங்களுடன் உள்நுழைகின்றனர். காலணிகளுடன் அங்கு பரவப்பட்டுள்ள மணல் பகுதிகளில் நடந்து திரிகின்றனர் என்றுகுற்றஞ்சாட்டப்படுகின்றது.

ஆனால், இந்த நபர்களை கண்டுகொள்ளாத பொலிஸாரும் மாநகர சபையினரும் வயோதிபர்கள், இயலாதவர்கள் விடயத்தில் மிகவும் இறுக்கமாக நடந்து கொள்கின்றனர் என்றும் சமூக வலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article