இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் இந்தியாவின் மூலோபாய கவலைகளுக்கு இடமளித்துள்ளது. இதையடுத்து, இந்திய தூதுவர் கோபால் பாக்லே மாற்றப்படுகிறார். அவரின் இடத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர் சந்தோஷ் ஜா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று புதுடெல்கியை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா இடையிலான உறவில் சந்தோஷ் ஜா முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவையும் சீனாவையும் தனது வசதிக்கு ஏற்ப கையாளும் இலங்கையை கட்டுப்படுத்துவதில் – இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைப்பதில் சந்தோஷ் ஜாவின் முக்கியத்துவம் பெறுவார் என்று இந்தியா கருதுகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மீள்வதற்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்தது. இந்த நிலையில், இலங்கை சீனாவுக்கு அளிக்கும் ஆதரவு இந்தியாவின் மூலேபாய கவலைகளை அதிகரித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கண்காணிப்பு கப்பல்கள், பாலிஸ்ரிக் ஏவுகணை கப்பலை இலங்கை அனுமதித்தமை இந்தியாவின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் கருதப்படுகின்றது. இந்த நிலையிலேயே சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான தூதுவராக நியமிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கான தூதுவர் மன்பிரீத் வோஹ்ரா எதிர்வரும் டிசெம்பரில் ஓய்வு பெறுகிறார். அவரின் இடத்துக்கு தற்போதைய இலங்கைக்கான தூதுவர் கோபால் போக்லே நியமிக்கப்படுவார் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.