புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்றினை செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி முதல் குறித்த இயந்திரத்தைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த 12 ஆம் திகதி காலை முதல் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி இடைநிறுத்தப்பட்டது.
இதன்படி, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் எந்தவொரு மின் உற்பத்தி நிலையமும் தற்போது இயங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, குறுஞ்செய்தி கோரிக்கை கிடைக்கப்பெற்றால் மாத்திரமே இன்று முதல், நாளாந்தம் பிற்பகல் 3 மணி வரை சூரிய மின்சக்தி படலங்களைத் துண்டிப்பது போதுமானது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதேநேரம், குறைந்தளவு கேள்வி நிலவிய கடந்த காலங்களில் தேசிய மின்சார கட்டமைப்பில் சமநிலைத் தன்மையைப் பேணும் பொருட்டு சூரிய சக்தி படலங்களைத் துண்டித்தமை தொடர்பில் அதன் உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.