போதைப்பொருள் விற்கு அதில் வரும் பணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு முகமை (என். ஐ.ஏ.) கைது செய்துள்ளது.
இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
ஆதி லிங்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கைதான நபர் சென்னையில் வசிப்பவர் என்றும இலங்கை, இந்தியாவில் போதைப் பொருள், ஆயுத கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் பினாமியாக செயல்பட்டவர் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் இந்தியாவில் தங்கியிருப்பதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து வைத்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கைதானவர்கள் அனைவரும் போதைப் பொருளை கடத்தி சம்பாதித்த பணம் மூலமாக விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்காக ஆயுதங்களை குவிக்கவும் நிதி மூலத்தை உருவாக்கவும் முனைந்தனர் என்று இந்திய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.