நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக உருவாக்கும் போதனா ஆசிரியர் சேவையின் யோசனையை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி நிர்வாக சேவை, போதனா ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் ஆலாேசனை சேவை, ஆசிரியர் சேவை என ஐந்து சேவைகள் தனித்தனியே உள்ளன. அந்த வகையில் கல்வியியற் கல்லூரிகளில் இருந்து உருவாகும் ஆசிரியர்கள் உயர் ஆசிரியர் கல்வி சேவையை சேர்ந்தவர்கள்.
திறமை மற்றும் மாவட்ட அடிப்படையில் கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் 7500 பேர் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டு ஆசிரியர் பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இதற்கு முற்பட்ட காலங்களில் வருடத்திற்கு 4000 பேரே ஆசிரிய பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.
மேலும் ஆசிரியர் கல்விச் சேவைக்கு 2100 பேரை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் நான் கல்வி அமைச்சர் பதவியை பொறுப்பேற்ற போது அந்த சேவையில் 866 பேரே இருந்தனர்.
அத்துடன் போதனா ஆசிரியர் கல்வி சேவைக்காக 705 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதுடன் அவர்களுக்கான பரீட்சை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றுள்ளது. அதன் செயல்முறை பரீட்சை விரைவில் நடத்தப்படவுள்ளது.
மேலும் 12 சம்பள தரங்களை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கும் செயற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன. அதற்காக திறைசேரி மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அவசியமாகும்.
அது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை பிரதமரின் தலைமையில் இடம்பெறும் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதனை கொள்கை ரீதியான தீர்மானமாக முன்னெடுப்பதற்கு அடுத்து வரும் அமைச்சரவைக்கு சமர்ப்பிகக இருக்கிறோம் என்றார்.