யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன், பௌத்தமயமாக்கல், காணி அபகரிப்பு, அரசாங்கத்தின் தவறான வரிக்கொள்கை மூலம் பெரும்பாலான வைத்தியர்கள், புத்திஜீவிகள்; நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமை தொடர்பிலும் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தில் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வட மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை செயற்பாடுகள் தொடர்பில் தாம் திருப்திருயடைவதாகவும் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த வட மாகாண ஆளுநர், மீள்குடியேற்றம், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட மக்களின் பொதுவான உட்கட்டமைப்புகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாக கூறினார்.