ஆசிரியர்கள் 8,000 பேரை புதிதாக நியமிக்க நடவடிக்கை!

editor 2

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, மேலும் 5,500 பட்டதாரி ஆசிரியர்களும், 2,500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத்தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில் கல்வித் துறையின் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், கல்வித்துறையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் தெரிவித்தார்.

நவீன உலகுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு, எமது மாணவர்களை தயார்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலைத்துறை, கணிதவியல் உள்ளிட்ட பாட விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் ‘ஸ்ரீம்’ என்ற தொனிப்பொருளில் எதிர்காலத்தில் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது கூறினார்.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை மாணவர்கள் தமது நேரத்தை வீணாகக் கழிப்பதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு ஆங்கிலம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுடன் கூடிய பாடநெறிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இது மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கவும் மேலும் இரண்டாம் மொழி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கும் அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அந்த வகையில் ஏற்கனவே சுமார் 8000 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மேலும் 5500 பட்டதாரிகள்,ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் மேலும், 2500இரண்டாம் மொழி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர் என்றும்இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Share This Article