குருந்தூரில் குழப்பம் விளைவித்த பௌத்த துறவிகள்! நெருக்கடிகளைக் கடந்து பொங்கல் நடைபெற்றது!

editor 2

குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கமைய, ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல் வைத்து, அதன் மீது தகரம் வைத்து, அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினர்.

ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, குறித்த ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி, படைத்து வழிபாடுகளை மேற்கொண்டபோது, அவ்விடத்தில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது. எனினும், அதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மறுபக்கம், பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து, பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Share This Article