யாழ்.மாவட்டத்தில் சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் திறன் சாரதி மற்றும் எழுதுதல், வாசித்தல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான குறைந்தவர்களுக்கு வாய்மொழிப் பரீட்சை நடாத்துதல் தொடர்பிலான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனச் சாரதிகளுக்காக, இன்றையதினம் (17) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
- சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் தொடர்பான நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 2023.08.25 2023.08.26 ஆந் திகதிகளில் நடாத்துவதற்கு மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பாடு உடைய பொதுமக்கள், தமது மோட்டார்வாகன பதிவுச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் யாழ்ப்பாண மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தமது விபரங்களை முற்பதிவு செய்து, வாகன அடிச்சட்ட இலக்கங்களை மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மீளப்பொறித்துக்கொள்ள முடியும்.
- எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்மொழிப் பரீட்சை யாழ்ப்பாண மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 2023.08.25 , 2023.08.26 ஆந் திகதிகளில் நடாத்துவதற்கு மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்துப்பரீட்சையில் இரண்டு தடவைகள் தோற்றி சித்தியடையத் தவறிய யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் பிரதேச செயலகத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று கிராம சேவை அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் யாழ்ப்பாண மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தமது விபரங்களை முற்பதிவு செய்து வாய்மொழிப் பரீட்சைக்கு தோற்ற முடியும் – என்றுள்ளது.