இலங்கையில் நடந்த அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. பொதுச் சபையின் மீளாய்வுக்குழு இலங்கைக்குப் பரிந்துரைத்துள்ளது.
காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக் களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறும் அது கோரியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்கல், பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி உள்ளகப் பொறி முறை நிறுவுதல், வெறுப்புணர்வுப் பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில், இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளை உள்ளடக்கிய 24 பக்க அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.