இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு எதிராக வெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் ஆலோசனையை பெற்ற பின்னர் எவ்வாறான தீர்மானத்தை கொண்டுவருவது என தீர்மானிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் சமீபத்தைய கூட்டத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி கனடாவுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சர் எடுப்பாரா என்றும் அந்த நாளிதழ் எழுப்பிய கேள்விக்கே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனப்படு கொலை இடம்பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.