கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டு பல கோடி ரூபா சம்பாதித்த கடற்படை மற்றும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட ஒழுங்க மைக்கப்பட்ட குழுவொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களில் சம்பூர் பகுதியில் உள்ள கடற்படை முகாமின் சிப்பாய் ஒருவரும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணக்கார தமிழ் வர்த்தகர் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதி இருபது பேர் கொண்ட குழுவொன்று சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முற்பட்டபோது பொலிஸாரால் பிடிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம், வர்த்தகம், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரிய வந்த தகவலின் அடிப்படையில் கடற்படை மற்றும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டபோது சிக்கிய வர்களிடம் இருந்து மூன்று கோடி இருபது இலட்சம் ரூபாவை இந்த கும்பல் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த பணத்தில் இராணுவ சிப்பாய் 70 இலட்சம் ரூபாயும், கடற்படை சிப்பாய் பத்து இலட்சம் ரூபாயும் பெற்றுள்ளமை தெரியவந்தது.
பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட உள்ளனர்.