“ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது. இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரம் துறந்து விட்டுப் பங்காளர்களாகத் தொடர்ந்தும் இருக்கின்றார்கள்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது. இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது.
தேர்தல்களை எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள் மொட்டுக் கட்சி மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்று இன்று பிதற்றுகின்றார்கள். அவர்களுக்குக் கடந்த தேர்தல்களில் மக்கள் எப்படிப் பாடம் புகட்டினார்கள் என்பது தெரியும்.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆசனத்தில் மொட்டுக் கட்சியே அமர்த்தியது. ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவி கேட்டு வாக்குவாதம் செய்ய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஜனாதிபதி நன்றி மறந்து செயற்பட மாட்டார் என்றும் நாம் நம்புகின்றோம்.” – என்றார்.