2022 ஆம் கல்வி ஆண்டின் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“63 பாடவிதானங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9 பாடவிதானங்களின், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக, கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட, 13 பாடவிதானங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
அதேநேரம், மேலும் பல பாடவிதானங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், ஜுலை மாதம் நிறைவடைந்த பின்னர், ஓகஸ்ட் மாதமளவில், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.
இதேநேரம், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பின்னர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.