“கோட்டாபய ராஜபக்சவால் வால் நாடு வங்குரோத்து அடைந்திருந்த நிலையில் நாட்டைப் பாரமேற்று நிலைமையைச் சரி செய்து வருகின்றார் ரணில் விக்கிரமசிங்க.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“குடும்ப அரசியல் தப்பில்லை. உலகிலும் அந்த நடைமுறை உண்டு. அவர்கள் தகுதியானவர்கள் என்றால் அவர்களை மக்கள் தெரிவு செய்வது ஜனநாயகம். இல்லையென்றால் மக்கள் நிராகரிப்பார்கள்.
ஆனால், ஒரு குடும்பம் மாத்திரமே ஆட்சியை நடத்த வேண்டும் என்று கூறுவது பிழை. மக்கள் விரும்பினால் அவர்களைத் தெரிவு செய்வார்கள்.
கோட்டாபய ராஜபக்சவால் வால் நாடு வங்குரோத்து அடைந்திருந்த நிலையில் நாட்டைப் பாரமேற்று நிலைமையைச் சரி செய்து வருகின்றார் ரணில் விக்கிரமசிங்க. நான்கு வருடங்களுக்குப் பின் புது வருடத்தைக் கொண்டாடுவதற்கும் மே தினத்தைக் கொண்டாடுவதற்கும் வெசாக் தினத்தைக் கொண்டாடுவதற்கும் எம்மால் முடிந்துள்ளது. இந்த நிலைமையை ஏற்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க.
கோட்டாபயவின் ஆட்சியில் இருந்த மின் வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு எவையும் இப்போது இல்லை. பொருட்களின் விலைகள் கட்டங்கட்டமாகக் குறைந்துகொண்டு செல்கின்றன.
யார் நல்லது செய்தாலும் அதைப் பாராட்டியே ஆகவேண்டும். அதேவேளை, அவர் பிழையான வழியில் சென்றால் அவரை விமர்சிப்பதற்குத் தயங்கமாட்டோம்.
ஆரம்பத்தில் நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை விரும்பவில்லை. யாருக்கும் கடன்படாமல் நாட்டைக் கொண்டு செல்வதற்கே முயற்சி செய்தோம். இறுதியில் முடியாத கட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றோம். வெற்றியும் கண்டோம்.
இன்று நாட்டின் பொருளாதார நிலை கட்டங்கட்டமாக முன்னேறி வருகின்றது. ரணில் ஜனாதிபதியானதும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலையில் இருந்து தப்பியுள்ளோம். இதனால் சர்வதேச நிதி நிறுவனங்கள், நாடுகள் எங்களுக்குக் கடன் வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் காலத்தில் எமது நாட்டுக்கு மேலும் கடன் கிடைக்கவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியன இணைந்து இந்த உதவியை வழங்கவுள்ளன.
மின் கட்டணம் இப்போது தாங்க முடியாத நிலையில் உள்ளதை நாம் அறிவோம். இந்த நிலை இப்படியே இருக்கப்போவதில்லை. எதிர்காலத்தில் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.” – என்றார்.