சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

editor 2

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு தொகுதியிலிருந்து காவல்துறையினரால் T-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, நீதிமன்ற உத்தரவின்படி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் அவர் கல்கிஸ்ஸை பதில் நீதவான் சாந்த குமாரகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டிருந்தபோது, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள், துமிந்த திசாநாயக்கவை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திப் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால், அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். 

தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி உரிமம் இல்லாத சட்டவிரோத துப்பாக்கி என்றும், வழக்கின் நான்காவது சந்தேகநபரான துமிந்த திசாநாயக்க, முதல் சந்தேக நபரை தொலைபேசியில் அழைத்து, தாம் அறிவிக்கும் வரை குறித்த துப்பாக்கியை வைத்திருக்குமாறு கூறியதாகத் தெரியவந்துள்ளதெனவும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். 

குறித்த துப்பாக்கி தமது தந்தையினுடைய பிரதான பாதுகாப்பு அதிகாரியின் பாதுகாப்பில் இருந்ததாக சந்தேகநபரான துமிந்த திசாநாயக்க, வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனினும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அதனை நிராகரிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். 

இது தொடர்பாக வெள்ளவத்தை காவல்துறையினர் தொலைபேசி அழைப்பு பதிவுகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அது தொடர்பாக பகுப்பாய்வு நடத்தி விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

அத்துடன், துப்பாக்கியை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கை பெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

இதற்கிடையில், குறித்த துப்பாக்கி மீது குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

அந்த துப்பாக்கி ஏதேனும் ஒரு இராணுவ முகாமிலிருந்து தொலைந்து போனதொன்றா? என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article