மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது தாக்குதல்!

editor 2

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் என்பவரே வழி மறிக்கப்பட்டு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை (14) காலை குடும்பிமலைப் பிரதேசத்தில் வைத்து வழி மறித்த நால்வர் அருகில் இருந்த பற்றைக் காட்டிற்குள் இழுத்துச் சென்று கைகளை பின்னால் கட்டிய நிலையில் மிக மோசமான முறையில் சரமாரியாக கையாளும் தடியாலும் தாக்கியுள்ளனர்.

இன்றைய தினம் குடும்பிமலைப் பிரதேசத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு ஏற்பாடாகி இருந்த நிலையில் ஏற்பாட்டாளர்களில் ஒருவருடைய தாயார் காலமானதன் காரணத்தினால் இன்றைய தினம் மேற்படி நிகழ்வினை நடாத்த முடியாமல் போனது.

இதன் காரணத்தை குடும்பிமலைக் கிராமத்திற்குச் சென்று உரியதரப்பினரிடம் தெரிவித்து விட்டு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

செல்லும் வழியில் தரவை இராணுவமுகாமிற்கும் ஐந்தாம் கட்டை சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்குமிடையில் வழி மறிக்கப்பட்டுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காணப்பட்ட நாள்வர் அரைகுறைத் தமிழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவது தொடர்பான கேள்விகளைக் கேட்டு சேட்டு கிழிக்கப்பட்டு உள் வெனியனால் கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவரின் மோட்டார் சைக்கிளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தாக்குதலுக்குள்ளான சிவில் சமூக செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

தாக்குதல்தாரிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் அந்த வழியால் வந்த சிலரால் காப்பாற்றப்பட்டு தற்சமயம் சந்திவெளி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This Article