நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 21 பேரின் சடலங்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பதில் அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.