கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல் நிலவரத்தில் முன்னேற்றம் – கெபே!

கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல் நிலவரத்தில் முன்னேற்றம் - கெபே!

editor 2

தேர்தல் நிலவரத்தைப் பார்க்கிறபோது, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் வன்முறையற்ற தேர்தல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கெபே அமைப்பு (CAFFE) தெரிவித்துள்ளது.

“அமைதியான தேர்தலுக்காக” என்கிற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வொன்று கிண்ணியா விஷன் மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது.

இந்த நிகழ்வை நீதியானதும் சுதந்திரமானதுமான மக்களுக்கான தேர்தலுக்கான இயக்கம் (CAFFE) ஏற்பாடு செய்திருந்தது.

தேர்தல் காலங்களில் ஏற்படும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய முறை தொடர்பிலும் இதன்போது தெளிவூட்டப்பட்டன.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வில் வளவாளராக தகவல் அறியும் உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி பங்கேற்றார்.

இதில் மாவட்ட இணைப்பாளர் ராபில், சமூக பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், பெண் வேட்பாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு வருகைதந்தவர்கள் “அமைதியான தேர்தலுக்காக” எனும் பதாகையில் கையொப்பமிட்டனர்.

அதன் பின்னர், கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ததில் இருந்து கெபே அமைப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த அடிப்படையில், தேர்தலுக்கு முன்னர், பின்னர், தேர்தல் அன்று என மூன்று தினங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மாவட்ட மட்டத்தில் 26 இணைப்பாளர்களும் தேசிய மட்டத்தில் 105 கண்காணிப்பாளர்களும் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்றபோது, அதிகளவு முன்னேற்றம் காணப்படுகிறது.

2011, 2018 உள்ளூராட்சி மன்ற தேர்தலை விடவும் வன்முறை சம்பவங்கள் குறைந்தளவில் பதிவாகியுள்ளது. எனவேதான், சமாதானமான, சுமுகமான, வன்முறையற்ற தேர்தலை நடத்த இந்த காலப்பகுதியில் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் அபேட்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். வன்முறையற்ற தேர்தல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என மேலும் கெபே அமைப்பு வேண்டிக்கொள்கிறது என தெரிவித்தார்.

Share This Article