‘பிள்ளையான் வாய் திறக்க ஆரம்பித்தால் பலருக்கு உள்ளே செல்ல நேரிடும். அதனால்தான் ஆட்சியை வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. குற்றவாளிகள் மற்றும் கள்வர்களும் தப்பமுடியாது.’ – என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா திட்டவட்டமாக அறிவித்தார்.
தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு
கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
பேராசிரியர் ஒருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
பிள்ளையான் செய்த குற்றம் அது மட்டுமல் அல்ல, அவர் பல குற்றங்களைச் செய்துள்ளார். புலிகள் அமைப்பில் இருந்த காலத்திலும் குற்றம் இழைத்துள்ளார்.
புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய பின்னர், ராஜபக்சக்களின் ஒப்பந்தத்தின் பிரகாரம் பல குற்றங்களை பிள்ளையான் செய்துள்ளார். எனவே தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் ராஜபக்ஷக்கள், ரணில் ஆகியோர் பீதியில் உள்ளனர்.
அவர்களின் கதைகள் பிள்ளையானுக்கு தெரியும். எனவே, பிள்ளையான் வாய்திறக்க ஆரம்பித்தால் சிக்கல் வரும் என்பதும் அவர்களுக்கு புரியும்.
பிள்ளையான் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தமக்கு தெரிந்தவற்றை கூறுவதற்கு பிள்ளையானுக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல விசாரிப்பதற்கு அதிகாரிகளுக்கும் நேரம் உள்ளது.
பிள்ளையான் வாய் திறக்க ஆரம்பித்தால் அவர்களுக்கு உள்ளே செல்ல நேரிடும்.
உள்ளே செல்லாமல் இருக்க வேண்டுமானால் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும்.
அதற்கே தற்போது முற்படுகின்றனர். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்-என்றார்.