மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு காத்துக்கொண்டிருக்கிறோம் – தேர்தல்கள் ஆணைக்குழு!

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு காத்துக்கொண்டிருக்கிறோம் - தேர்தல்கள் ஆணைக்குழு!

editor 2

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.

முன்னை பாராளுமன்றத்தில் முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் தாமடைந்து வருகின்ற நிலையில் அதற்கான நகர்வுகள் தொடர்பில் வினவிய போதே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

‘‘ஒவ்வொரு முறையும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இது தொடர்பான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஒன்று எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுங்கள்.

அல்லது பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுங்கள்’’ இவ்வாறு குறிப்பிடுகிறார் சிவசுப்பிரமணியம் அச்சுதன்.

2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைவான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால் புதிய முறைமையில் தேர்தல் நடத்த முடியாத சூழல் காணப்படுகிறது.

அதேவேளை பழைய முறைமையில் நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் கடந்த சில வருடங்களாகவே இந்த இரண்டு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றன.

இந்நிலையில் இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் கேசரிக்கு மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயகத்தின் விழுமியங்களை நாங்கள் பார்க்கின்ற போது, அதன் அடிப்படை தேர்தலாகும். இலங்கையில் நடைபெற ஏற்பாடாக இருக்கின்ற ஒவ்வொரு தேர்தலும் மிக முக்கியமானது.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்பன ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும். இந்தத் தேர்தலுக்கான காலப்பகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் இன்னும் நடத்தப்படவில்லை.

மாகாண சபைகளின் காலம் முடிவடைந்தாலும் தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சட்ட சிக்கல் உள்ளது. 2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை முறைமையை மாற்றி பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள்.

தொகுதி மற்றும் விகிதாசார முறை என்ற கலப்பு முறைமையை தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த தேர்தல் முறைமைக்கு ஏற்ப தொகுதி எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதில் விநோதமான செயல் என்றால் அந்த அறிக்கையை சமர்ப்பித்த அப்போதைய அமைச்சரே அதற்கு எதிராக வாக்களித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது இரண்டு வழிமுறைகள் காணப்படுகின்றன. பழைய முறைமையில் தேர்தலை நடத்த ஒரு பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அல்லது எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றம் ஏற்க வேண்டும். இதில் ஒன்றை விரைவாக செய்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்.

இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் சாதாரன பெறும்பான்மை போதுமாகும். குறித்த பிரேரணையை ஆளுங்கட்சியே செய்ய வேண்டும் என்றில்லை. பாராளுமன்றம் எவரும் கொண்டு வரலாம் என்று குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் விஜயம் மேற்கொண்டபோது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இரு தரப்பு சந்திப்புகளின் போதும் இது தொடர்பாக பேசப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதியில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்கவும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

Share This Article