எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹுங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தனது உரையில் பிரதமர் கூறியதாவது,
எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாங்கள் அகற்றியுள்ளோம். அந்த மக்கள் விரோத ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் இனி எந்தப் பாதுகாப்பும் இல்லை. இதனால் பயந்து குழப்பமடைந்தவர்கள் அரச சேவையிலும் உள்ளனர். பாதுகாப்புத் தரப்பிலும் உள்ளனர். இவற்றையெல்லாம் அரசியல் ஆசீர்வாதத்துடனேயே மேற்கொண்டு வந்தனர்.
இப்போது அரசியல் ஆசீர்வாதம் இல்லாமல் போய்விட்டதால், எஞ்சிய முடிச்சுகளை அவிழ்க்க இது உள்நோக்கித் திருப்பப்பட்டுள்ளது. இப்போது அதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.
அதன் இரண்டு மிகவும் பிரபலமான சம்பவங்களில் ஒன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டதாகும். பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டமை ஆகும். இதற்கு முன்பு பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதற்காக பாராளுமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளது. இன்று, அந்தக் கும்பலால் பாதுகாக்கப்பட்டவர்கள் கூட பயப்படுகிறார்கள்.
முன்னைய ஆளும் கட்சியில் அமைச்சரவை பதவிகளை வகித்த பிள்ளையான் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கேயும் சில வேடிக்கையான விடயங்களைப் பார்த்தேன். மொட்டு கட்சியினரின் கூற்றுப்படி, பிள்ளையான் தான் போரை வென்றுள்ளார். ஆனால், பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
சூரியவெவ பிரதேச சபை சந்தை வரியை அறவிடுவதாகக் கூறப்படுகிறது. வரிகள் அறவிடப்படுமானால், அவை மீளவும் மக்களுக்கு ஒரு சேவையாகவோ அல்லது வசதியாகவோ வழங்கப்பட வேண்டும். இந்த முறை வரிக் கொள்கையை மீறுவதாகும். வரி அறவிட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வேறு ஒருவர் பணத்தை அறவிடுகிறார். அறவிடப்படும் வரிகளைக் கொண்டு சந்தை பராமரிக்கப்படுமானால், சந்தை சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.
சூரியவெவ பிரதேச சபையின் வருமானம் 110 மில்லியன் ரூபாவாகும். அந்தப் பணத்தை பிரதேச சபைக்கே செலவிட்டிருந்தால், இன்று அது சிறந்த நிலையில் இருந்திருக்கும். அப்படி இல்லையென்றால், அந்தப் பணம் யாரோ ஒருவரின் கைகளுக்குச் சென்றுவிட்டது.
பாடசாலைகள் பணம் அறவிடக்கூடாது என்று கூறப்பட்டாலும், அது இன்னும் நடப்பதாக எங்களுக்கு முறைப்பாடுகள் வருகின்றன. விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்போம். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரிக்க அமைச்சில் போதுமான விசாரணை அதிகாரிகள் இல்லை. நாங்கள் இப்போது அந்த விசாரணைப் பிரிவை பலப்படுத்தி வருகிறோம்.
நாங்கள் நிறைவேற்றிய வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்காக அதிக அளவு பணத்தை ஒதுக்கியுள்ளோம். கிராமத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கிராமத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறைவேற்றுவோம்.
அரசாங்கம் இப்போது பொருளாதாரத்தை ஒரு ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். இதை வருவாயை அதிகரிக்கும் ஒரு நிலைக்கு நாம் கொண்டுவர வேண்டும்.
உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சித்தியடையாத சில பிள்ளைகள் ஏற்கனவே இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருகின்றனர். அதேவேளை, சிலர் தொழில் திறன்களைப் பெறுவதற்காக முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆனால், சில பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்ற தெளிவான நோக்கம் எதுவும் அவர்களிடம் இல்லை.
ஏனென்றால், இந்தக் கல்வி முறை அந்த பிள்ளைகளுக்கு ஒரு பாதையை வகுத்துத் தரவில்லை. நாங்கள் எதிர்காலத்தில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள எங்கள் புதிய திட்டத்தில், அனைத்து பிள்ளைகளுக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்கும் ஒரு முறைமையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்கள் அதை 2026இல் ஆரம்பிப்போம்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது என்றும், எதிர்காலத்தில் இவை அனைத்தையும் சரிசெய்ய அரசாங்கம் பாடுபடும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாலிய சந்தருவன், அதுல வெலந்தகொட உட்பட பல வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.