அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவாகி, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றுகூட இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறிருக்கையில் நாம் காணிகளை விடுவிப்போம், வீதிகளைப் புனரமைப்போம் என்று ஜனாதிபதி கூறுவதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கான யுக்தியின் ஒரு வடிவமேயாகும். மாறாக அவரும் ஏனைய சிங்களத்தலைவர்களைப்போல தன்னை ஒரு சிங்கள தேசியத்தலைவராகவே அடையாளப்படுத்துகின்றார் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ‘வடக்கு மக்கள் பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பாரிய எதிர்பார்ப்புடன் என்மீது நம்பிக்கைவைத்து அமோக ஆதரவளித்துள்ளார்கள். என்மீதான நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்பேன்’ எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை மன்னாரில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருக்கும் உள்ளுராட்சிமன்றங்களால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும்போது அவற்றுக்குக் கண்ணை மூடியவாறு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் எனவும், வேறு கட்சிகள் ஆட்சியமைத்திருக்கும் உள்ளுராட்சிமன்றங்களால் சமர்ப்பிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவுகள் குறைந்தபட்சம் 10 தடவைகளேனும் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இக்கருத்து தொடர்பில் கடும் விசனத்தை வெளியிப்படுத்திய சிவஞானம் சிறிதரன், இதுபற்றி மேலும் கூறியதாவது:
தமது கட்சி ஆட்சியமைக்கும் உள்ளுராட்சிமன்றங்களுக்கு கண்ணை மூடியவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ஏனைய கட்சிகளின் முன்மொழிவுகள் நன்கு ஆராயப்படும் என்றும் ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் கருத்து அவரது அறிவிலித்தனத்தைக் காண்பிக்கிறது. ஏனெனில் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுபவருக்கு ஒட்டுமொத்த மக்களும் வாக்களிப்பதில்லை. அவருக்கு வாக்களிக்காத எத்தனையோ பேர் இந்நாட்டில் இருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறுவது எதேச்சதிகாரப்போக்கிலான ஒரு அராஜக செயற்பாடாகும். இது ஜனாதிபதியிடம் இருக்கும் இனவாதத்தின் மற்றொரு முகமாகும்.
இருப்பினும் இக்கூற்றை தமிழ் மக்கள் ஒரு நல்ல சகுனமாகக் கருதமுடியும். ஏனெனில் வட, கிழக்கு மாகாணங்களின் உள்ளுராட்சிமன்றங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளடங்கலாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தான் ஆட்சியமைக்கும். அவ்வாறிருக்கையில் இங்குள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்கமுடியாது என அரசாங்கம் கூறுமேயானால், எமக்கான தனிநாட்டைப் பிரித்துத்தருவதற்கான தீர்மானத்தை அவர்கள் மேற்கொள்ளவேண்டும்.
இல்லாவிடின் அதனை முன்னிறுத்தி நாம் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றுக்குத் தயாராவோம். ஆகவே நாம் தென்னிலங்கையுடன் இணைந்து பயணிப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதைத் தீர்மானிப்பதற்கான கதவொன்றை தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறந்துவிட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
அதேபோன்று அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவாகி, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அரசியல்கைதிகளில் இன்னமும் ஒருவர் கூட விடுவிக்கப்படவில்லை. வீதிகள் புனரமைக்கப்படவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொழிற்சாலைகள் நிறுவப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டைப் பொறுத்தமட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிமுகப்படுத்திய நடவடிக்கைகளையே இவர்கள் தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள். புதிய அரசாங்கத்திடம் சிறந்த பொருளாதாரக்கொள்கையோ, முன்நோக்கிப் பயணிப்பதற்காக திட்டமிடலோ, உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளோ இல்லை.
அவ்வாறிருக்கையில் நாம் காணிகளை விடுவிப்போம், வீதிகளைப் புனரமைப்போம் என்று ஜனாதிபதி கூறுவதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கான யுக்தியின் ஒரு வடிவமேயாகும். மாறாக அவரும் ஏனைய சிங்களத்தலைவர்களைப்போல தன்னை ஒரு சிங்கள தேசியத்தலைவராகவே அடையாளப்படுத்துகின்றார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றார்.