இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கையின் இருப்பினை இந்தியாவுக்கு கையளிக்கவும், அவர்களின் அனுதாபத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எழுந்து வரும் சீன இராணுவ எழுச்சியை எதிர்கொள்வதற்கும் வகையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன் விளைவை என்றோ ஒரு நாள் நிச்சயம் எதிர்கொள்ள நேரிடுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை வெள்ளிக்கிழமை (04) மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கப்பாடுகள் குறித்து இலங்கை ஊடகங்கள் முக்கிய பல விடயங்களை வெளிப்படுத்தவில்லை. அரசாங்கமும் உண்மையை வெளிப்படுத்தவில்லை.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் அதனால் இலங்கைக்கு கிடைக்கும் சாதக மற்றும் பாதக விளைவுகள் குறித்து போதுமான விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. தீர்மானமிக்க வகையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கை ஊடகங்கள் வெளிப்படுத்தாத பல விடயங்களை இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்திய ஊடகங்களில் ஒருசில ஊடகங்கள் இந்திய பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு இணையாக பாதுகாப்பு தொடர்பில் மிகவும் முக்கியமானதொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் எழுந்து வரும் சீன இராணுவ எழுச்சியை எதிர்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் சாதகமாக அமையும் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கோ, நாட்டு மக்களுக்கோ அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு கூட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி அறிவிக்கப்படவில்லை. ஒப்பந்தத்தின் சுருக்கம் மாத்திரமே அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கம் எவருக்கும் வழங்கப்படவில்லை. சாதக அம்சங்கள் மாத்திரமே சுருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர எதிர்விளைவுகள் ஏதும் குறிப்பிடப்பிடவில்லை.
இருதரப்பு பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் சக்தி வலு தொடர்பான ஒப்பந்தங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.ஏன் ஒப்பந்தங்களை மறைக்க வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை காட்டிலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் இருந்த கொள்கையில் இருந்து முழுமையாக மாற்றமடைந்துள்ளதாக தமிழ் கார்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியாவுடன் கைச்சாத்திப்படவுள்ள ஒப்பந்தங்கள் சாட்சிபகிர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மறைமுகமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது உடந்தையாக செயற்படுகிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போன்று இவரும் இலங்கையை காட்டிக்கொடுத்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது.இலங்கையின் இருப்பினை இந்தியாவுக்கு கையளிக்கவும், அவர்களின் அனுதாபத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் குறிப்பிட்ட விடயங்களுக்கும், தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையை இந்தியாவிடம் காட்டிக்கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.தற்போது இவர் என்ன செய்கிறார். என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும் என்றார்.