இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமைத் தடைகளை விதிக்கின்றது என பிரிட்டன் தடைவிதித்துள்ள நால்வரில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தனது கடந்தகால செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ள அவர் காசா சிரியா ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற பகுதிகளில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஏன் பிரிட்டன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் அவுஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தீவிரமாக செயற்படுகின்றனர் தனி ஈழம் என்ற தங்களின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள வசந்த கரனாகொட விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய தலைவர்களிற்கு எதிராக தடைகளை விதிப்பதற்காக அரசியல்வாதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயல்கின்றனர் அதற்காக நிதி திரட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இது ஆரம்பமாகயிருக்கலாம், வெளிஅழுத்தங்களால், மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி,முன்னாள் மனித உரிமை சட்டத்தரணியான பிரிட்டிஸ் பிரதமர் பெரும்பான்மை பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்காக இதனை பயன்படுத்துகின்றார் இது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தடைகளிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்,பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவிய பாதுகாப்பு அதிகாரிகளிற்கு ஆதரவாகயிருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.