ஈழவிடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதை ஒட்டி நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளில் இன்று தமிழ் மக்கள் பங்கேற்கின்றனர்.
நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகங்களுடன் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்க்கொடைகளுடன் முள்ளிவாக்காலில் ஈழ விடுதலைப் போராட்டம் ஓய்வுக்கு வந்தது.
மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் தென்னிலங்கை ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது பிஞ்சுக் குழந்தைகள், கர்ப்பவதிகள், வபோதிகள் என பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டுவந்த பல நூறு கோடி ரூபாய் பெறுமதியிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன் அபகரிக்கப்பட்டன.
அத்தனை துயரையும் ஒரு சேர நினைவுகூரும் “மே 18” நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு – கிழக்கு உட்பட ஈழத்தமிழர்கள் பரந்து வாழும் பகுதிகளில் இன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
தமிழர் தாயக்தின் பிரதான நினைவு வணக்க நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள முள்ளிவாக்கால் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் இன்று முற்பகல் 10.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனைய சுடர்கள் ஏற்பட்டு நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக போரில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட வழிபாடுகளும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் மேற்கொள்ளப்பட ஏற்பாடாகியிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவு வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பாறையிலிருந்து பயணித்த நினைவு ஊர்திப் பேரணி இன்று முற்பகல் முள்ளிவாக்காலை வந்தடையவுள்ளது. அதேவேளை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியும் முள்ளிவாக்காலை சென்றடையவுள்ளது.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.