அரியாலையில் மனிதப் புதைகுழி; விஞ்ஞான ரீதியான அறிக்கை நீதிமன்றுக்கு!

அரியாலையில் மனிதப் புதைகுழி; விஞ்ஞான ரீதியான அறிக்கை நீதிமன்றுக்கு!

editor 2

அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பெறப்பட்ட 40இற்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகளில் இரண்டு தவிர, ஏனைய அனைத்தும் மனித எலும்பு எச்ச மாதிரிகளாகவே உள்ளன என்று விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்திய அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.

சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன். அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, யாழ். போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தனது அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பித்தார்.

அதில், அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் 40இற்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் இரண்டு தவிர ஏனைய அனைத்தும் மனித எலும்புகளின் எச்சங்களாகவே உள்ளன என்பதை விஞ்ஞானபூர்வமாக
உறுதி செய்திருந்தார்.

அத்துடன், 2 அடி ஆழத்துக்கு கீழேயே இந்த மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்ச்சியாக மனித எலும்பு எச்சங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதா அல்லது தனிப்பட்ட மனித புதைகுழியா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தொல்லியல்துறையின் மூத்த ஆய்வாளர் ராஜ் சோமதேவா இந்த ஆய்வை செய்வதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளார் என்றும் சட்ட மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களை கருத்தில் கொண்ட நீதிவான் ஆனந்தராஜா, முதல் கட்டமாக அந்தப் பகுதியை ஸ்கான் மூலம் ஆய்வு செய்வது என்றும் இது தொடர்பில் எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீதிமன்றத்தில் கலந்துரையாடப்படும் எனவும் கூறினார். அத்துடன், கால நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார இதேசமயம், அரியாலை மனித புதைகுழி தொடர்பில் ஆய்வை செய்ய விருப்பம் தெரிவித்துள்ள ராஜ் சோம தேவா மன்னார், கொக்குத்தொடுவாய் புதைகுழிகளையும் ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அண்மையில் குழி தோண்டிய போது இந்த மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டன. இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றின் கவனத்துக்குக்கொண்டு வந்ததையடுத்து, கடந்த 20ஆம் திகதி நீதிவான் ஆனந்தராஜா அந்தப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

முன்னதாக 1998ஆம் ஆண்டில் செம்மணியில் மனித புதைகுழி இருப்பது வெளிவந்தது. யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து கைப்பற்றிய இராணுவத்தினர் பிடித்துச் சென்ற பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

1999இல் அந்த இடம் ஆய்வு செய்யப்பட்டு 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து அந்த ஆய்வுநிறுத்தப்பட்டது. தற்போது அரியாலையில் கண்டு
பிடிக்கப்பட்ட மனித புதைகுழி செம்மணியில் மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தின் தொடர்நிலமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article