தமிழ் போராட்ட அமைப்புகள் ஆயுதங்களை ஒப்படைத்தனவா? விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டனவா என்று நேற்று நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினார் தயாசிறி ஜயசேகர எம். பி.
அத்துடன், பாதாள உலகக் குழுவினரிடம் உள்ளவை மக்கள் விடுதலை முன்னணியினரின் (ஜே. வி. பி.) ஆயுதங்களா? அரச படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2,136 ஆயுதங்களை அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்க வில்லை என்றும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தனது உரையில் தெரிவிக்கையில்,
புதுக்கடை நீதிமன்றத்தின் 09 ஆம் இலக்க அறைக்கு கொண்டுவரவிருந்த நபரை நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் 05 ஆம் இலக்க அறைக்கு கொண்டு வந்தது எவ்வாறு, குறித்த சந்தேக நபரை 05 ஆம் இலக்க அறைக்கு கொண்டு வந்த போது அங்கிருந்த நீதிவான்’ ஏன் இவரை இங்கு கொண்டு வந்தீர்கள்’ என்று பாதுகாப்பு தரப்பினரிடம் வினவியுள்ளார்.
புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிமன்றத்தின் உள்ளக தரப்பினர் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதை அன்று குறிப்பிட்டேன். சிறைச்சாலை மற்றும் பொலிஸார் அனைவரும் ஒன்றிணைந்தே குறித்த கைதியை நீதிமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
புலனாய்வு அதிகாரிகள் தகவல் சேகரிப்பதற்காக பொதுமக்களுடன் மக்களாக இருப்பார்கள். தற்போது பாதாள குழுக்கள் பொலிஸ் தரப்புக்குள் புகுந்துள்ளது.
இதுவே பாரதூரமான பிரச்னை. பாதுகாப்பு வலயத்துக்குள் இந்தநிலைமையே காணப்படுகிறது. புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நீதிபதியின் முன்னிலையில் துப்பாக்கிச்சூட்டு பிரயோகிக்கப்பட்ட போது நீதிபதி அச்சமடைந்து ஒளிந்துள்ளார்.
இது கவலைக்குரியது. இதுவே இன்றையநிலை. இவற்றை பற்றி பேசும் போது தான் எமது வாய் மூடப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு என்பன இரண்டல்ல – இரண்டும் ஒன்றே 30 வருட கால போரே தேசிய பாதுகாப்பு செயலிழக்கக் காரணம்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை பயன்படுத்தினர். அதன் பின்னர் பல உப
குழுக்கள் காணப்பட்டன.
அரச படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2,136 ஆயுதங்களை ஜே. வி. பியினர் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் அரசாங்கங்களை அச்சுறுத்துவதற்காக மக்கள் விடுதலை முன்னணி பல குழுக்களாக செயல்பட்டது.
ஜே. வி. பியினர் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிக்காத ஆயுதங்களையா பாதாள குழுக்கள் தற்போது பயன்படுத்துகின்றன? – என்றார்.