முன்னாள் ஜனாதிபதிகள் தமது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது பிரதமர் நிதி தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பிரதமர் இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல் 2014 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 3572 மில்லியன் ரூபாயும், 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 384 மில்லியன் ரூபாயும், கோட்டாபய ராஜபக்ச 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு இரு வருடங்களில் 126 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுவரை ரணில் விக்கிரமசிங்க 533 மில்லியன் ரூபாயையும், 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2025 பெப்ரவரி மாதம்வரையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாயும் செலவிட்டுள்ளனர்.
மேலும் பிரதமர் உரையாற்றுகையில்,
“நாமும் பணிகளைச் செய்துள்ளோம். நாமும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளோம். நாமும் மக்களுக்காக பணியாற்றியுள்ளோம். இந்த நாட்டை பிரதிநிதித்துவம் செய்துள்ளோம். ஆனால் அதற்காக நாம் மக்களுக்குச் சுமையாக இல்லாமல் அந்த மக்கள் பணத்தை திட்டமிடலுடனே பணிகளைச் செய்கின்றோம். அவை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. இப்போது எங்களுக்குக் கூறினீர்கள் தானே. பேச்சில் மாத்திரமல்ல செயலில் காட்டுங்கள். இப்போது நாங்கள் செயலில் காட்டியுள்ளோம்” என்று பிரதமர் கூறினார்.