இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் பயணித்த யுவதி ஒருவரை அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் கேலி செய்ததாக பேருந்துச் சாரதியையும் நடத்துநரையும் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20) இரவு மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையிலிருந்து புல்லுமலை ஊடாக மட்டக்களப்பு வரை போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் இ.போ.ச பஸ்ஸில் பயணித்த புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை நேற்று சாரதியும் நடத்துநரும் கேலி செய்ததாக அந்த யுவதி தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், அந்த பஸ் மட்டக்களப்பிலிருந்து பதுளை நோக்கி மாலை 5.30 மணிக்கு சேவையை ஆரம்பித்ததையடுத்து, அந்த பஸ் புல்லுமலை பகுதியிலுள்ள தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டது.
அவ்வேளை தரிப்பிடத்தில் காத்திருந்த இருவர் சாரதி, நடத்துநருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டதை தொடர்ந்து, தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
கைதான இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.