பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (05) சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்ட ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டி ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து, உரையாற்றிய போது மேற்கண்டவாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்ற உறுப்பினரான இவரின் (அர்ச்சுனாவை நோக்கி) செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இவர் உங்களை நோக்கி (சபாநாயகரை) வெட்கம் என்று தகாத வார்த்தைகளை பிரயோகிக்கிறார்.
அத்துடன் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான விடயம் என்றும் கூறுகின்றார். இங்கே சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது. இங்கே சிறுபான்மை என்று நாங்கள் எவரையும் கதைப்பதில்லை. பெரும்பான்மை என்று எவரும் செயற்படுவதில்லை.
இவ்வாறான கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் சபையில் இடமளிக்க வேண்டாம். இவருக்கு தலையில் பிரச்சினை உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.