உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் வாக்கெடுப்பு தினத்தன்று அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையாளர்கள் என அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பலர் வாக்களிக்காமல் தமது சேவைகளில் ஈடுபடுகிறார்கள்.
வாக்களிப்பு தினத்தன்று அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்களுக்கு தபால்மூல வாக்களிப்புக்கு அனுமதியளிக்குமாறு தேர்தல் முறைமை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் குழுக்களிடம் பலமுறை யோசனைகளை முன்வைத்துள்ளோம்.இருப்பினும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஏதும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உத்தியோகபூர்வ பெறுபேற்றை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்த யோசனைகளை முன்வைத்தோம்.
ஆகவே இந்த யோசனைகளை நிறைவேற்றுவதற்கு தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து பிரயோகிப்போம்.
உள்ளூர் அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே செயற்பட முடியும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்போம் என்றார்.