நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை; வர்த்தமானி அடுத்த வாரம் வெளியாகும்!

Editor 1

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும். விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுபவர்கள், அரிசி தட்டுப்பாட்டுக்கான காரணிகளைக் குறிப்பிடுவதில்லை.

வருடாந்தம் 40 இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில் அவற்றில் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அளவிலான நெல்லே அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து சுமார் 5000 மெற்றிக்தொன் அரிசியே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நெல்லை கொள்வனவு செய்து அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி அரசாங்கத்திடம் இருக்கவில்லை.

இவ்வாறான காரணிகளால் தான் தற்போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலைகளை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.இம்முறை பெரும்போக அறுவடையின் போது விவசாயிகளிடமிருந்து 3 இலட்சம் மெற்றிக் தொன் வரையிலான நெல்லை கொள்வனவு செய்வோம்.

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும்.விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

அரிசி தட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு காண்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம். விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து அதனை அரிசியாக்கி சாதகமான விலைக்கு சந்iதைக்கு விநியோகிப்பதற்கான திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளோம் என்றார்.

இந்நிலையில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான பெரும்போக விவசாயத்தில் நெற்பயிர்ச்செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய அமைப்பின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் விவசாயத்துறை, கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஒரு கிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயிக்குமாறு யோசனை முன்வைத்துள்ளனர்.

இந்த யோசனை தொடர்பில் கமத்தொழில் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.யூ.குணரத்ன குறிப்பிடுகையில் நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயித்தால் 18 இலட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் ஆனால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள்.

நெல்லுக்கான உத்தரவாத விலையை 150 ரூபாவாக நிர்ணயித்தால் ஒரு கிலோகிராம் நாடு அரிசியின் விலை 330 ரூபாவாகவும் சம்பா அரிசியின் விலை 360 ரூபாவாகவும்,கீரி சம்பா அரிசியின் விலை 420 ரூபா வரை உயர்வடையும்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தகர்கள் அவற்றை பின்பற்றுவதில்லை.

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காமல் விவசாயிகளுக்கு உரம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணத்தை வழங்கி ஒருகிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 முதல் 105 ரூபாய் வரை நிர்ணயித்தால் அரிசியின் விலையை 180 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை நிர்ணயிக்க முடியும். அப்போது தான் விவசாயிகளும் நுகர்வோரும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article