மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல்மாத தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்காக முன்னதாக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறை வேற்றுவதற்குப் போதியளவு கால அவகாசம் உள்ளது.
எனவே, அதனை நிறைவேற்றி மூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தக்கூடிய சட்டரீதியானஇயலுமைகள் கிடைக்கப் பெறும். அதற்கமைய, மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தமுடியும்.
அத்துடன், இந்த தேர்தலுடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து அனைத்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையில் எதிர்வரும் 17 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.