சுங்கத்துறை அதிகாரிகள் ஏழு நாட்களும் பணியாற்றத் தீர்மானம்!

Editor 1

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றவுள்ளனர்.

இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் சுங்கத்துறை விடுவிப்பில் ஏற்படும் தாமதத்தை அடுத்த நான்கு நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இலங்கை சுங்கம் உட்பட அரசதுறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, துறைமுகம் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.

இதன் போது துறைமுக துறையை அபிவிருத்தி செய்வதற்கான குறுகிய கால மற்றும் மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களைச் செயற்படுத்துவது அவசியமான போதும் தற்பொழுது எழுந்துள்ள சூழ்நிலையைத் தீர்க்க,அனைவரும் இணைந்து செயற்படுவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது.

தற்பொழுது எழுந்த சூழ்நிலையைத் தீர்க்க, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி, அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டன.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு அனுமதி வழங்கும் செயல்பாட்டில் நிலுவையில் உள்ள தேக்கத்தைத் தீர்க்க, இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் பணியாற்ற உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

பரிசோதனை மட்டத்திலுள்ள கொள்கலன்களை வைப்பதற்கான துரித நடவடிக்கையாக UCTயில் (Unity container Terminal) இடம் ஒதுக்க அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதற்கமைய புளூ மெண்டல் பகுதியில் 5 ஏக்கர் காணியைப் பயன்படுத்த இதன் போது முடிவு செய்யப்பட்டது.

ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இரண்டு ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், எஞ்சிய நிலத்தை பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

துறைமுக முனையத்தில் வேண்டுமென்றே கொள்கலன் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பது கொள்கலன் போக்குவரத்து நெரிசல் உக்கிரமடைய காரணம் என அடையாளம் காணப்பட்டதால், இந்தக் கொள்கலன் வாகனங்களை நிறுத்துவதற்கு பேலியகொட பகுதியில் காணியொன்றை வழங்க அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்புக்கான நேரத்தில் பணிக்கு வராத தடயவியல் எழுதுவினைஞர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனியார் சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தன.

இந்த ஊழியர்களை சரியான நேரத்தில் வேலைக்கு அழைத்து வரும் பொறுப்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களிடமே உள்ளது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

உணவு சார்ந்த பொருட்களுக்கு வெளிநாட்டு ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் கட்டாயம் என்பதையும்,அதில் ஏதேனும் முறைகேடுகள் நடத்திருந்தால், அரசாங்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இறக்குமதியாளர்கள் உடன்பாடு தெரிவித்தனர்.

துறைமுக வளாகத்திற்குள் கொள்கலன்களை சுங்கத்துறை விடுவிப்பு வரையான காலம் வரை கட்டணமின்றி தரித்து வைப்பதற்கான காலத்தை இரண்டு நாட்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அடுத்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இதனை ஒரு நாளாகக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அவசரகால செயல்முறையை ஜூன் 30 ஆம் திகதி வரை தொடர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ,துறைமுகங்கள், சுங்கம் மற்றும் துறைமுகம் தொடர்பான ஏனைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் யாவும் ஒரே குடும்பமாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

தற்பொழுது வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் வாகனங்களுக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குமாறு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற துறைமுக சேவை வழங்கும் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

Share This Article