கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனத்துடன் மருந்துக்காக ஒப்பந்தம்!

Editor 1

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மருந்துக்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. 

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்த குற்றச்சாட்டை முன்வைத்த அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ, குறித்த நிறுவனம் மீதான சர்ச்சையையும் பொருட்படுத்தாது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம், நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் க்ளோஎக்சடின் 270,000 மருந்து போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்காக, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் விலைமனுவை கோரியிருந்தது. 

கோரப்பட்ட விலைமனுக்கல் தொடர்பில் கடந்த டிசம்பர் 20 ஆம்திகதி அன்று முடிவு எட்டப்பட்டது. 

அதன்படி மிகக் குறைந்த ஏலத்தொகையை முன்வைத்த நிறுவனத்துக்கு விநியோக ஒப்பந்தத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

இருப்பினும், இந்த நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம் என்றும் ,அது நிதி பரிவர்த்தனைகளில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இவ்வாறு கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பெறப்படும் மருந்துகளால் நோயாளர்களும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின் அதற்கு தற்போதைய சுகாதார அமைச்சரே பொறுப்பு கூறவேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

Share This Article