ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவிலிருந்து 162 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளன!

Editor 1

ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவுக்கு சொந்தமான 162 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் அண்மையில் காணாமல் போனமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குக் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். 

இந்த விசாரணைகளுக்கு உத்தரவுகள் தேவைப்படின், அவற்றை மனு ஒன்றின் ஊடாக கோருமாறும், அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் குறித்த விடயம் தொடர்பான உண்மைத் தகவல்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போனதை அடுத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். 

பின்னர், குறித்த கடிதம் நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை நிதி மோசடி விசாரணைப்பிரிவு நீதிமன்றுக்குத் தெரிவித்திருந்தது. 

இது தொடர்பில், கொள்முதல் பிரிவுக்குப் பொறுப்பான கணக்காய்வாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Share This Article