மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ. நா.பராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு வர முடிவெடுத்ததாகவும் ரோஹிங்கியா ஏதிலிகள் கூறினர்.
இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் புறப்பட்டதாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் கூறினர்.
அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்து குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் கூறினர்.
இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபாய் வழங்கி படகை கொள்வனவு செய்து கடந்த டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அகதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படகை செலுத்தி வந்த குற்றச்சாட்டில் இந்த 11 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.