இராஜதந்திர பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரத்ன கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாத்திலிருந்து டெல்லியில் இராஜதந்திர பணிகளை பொறுப்பெடுத்திருந்த ஷேனுகா செனவிரத்ன அழைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர் கூடிய விரைவில் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
உலக நாடுகளில் பணிப்புரிகின்ற இலங்கை இராஜதந்திர மையங்களை முழு அளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர உயர் பதவிகளுக்கு கடந்த ஆட்சி காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் மற்றும் உறவு ரீதியான நியமனங்களை இரத்து செய்வதற்குமான அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இதன் பிரகாரம் சுமார் 16 இராஜதந்திரிகளை உடனடியாக நாட்டுக்கு மீள வரவழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
அதற்கமைய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் கலாநிதி லலித் சந்திரதாச, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் அனுர பெர்னாண்டோ, இந்தியாவின் சென்னையில் உள்ள பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் எஸ்.எம்.ஏ.எஃப். மௌலானா ஆகியோர் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள நிஷான் மாணிக் முத்துகிருஷ்ணா, அங்குள்ள மூன்றாவது செயலாளர், தாரக திசாநாயக்க, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளர் சஞ்சய் புஞ்சிநிலமே, ரோம் தூதரகத்திலுள்ள மெல்கி சந்திமா பெரேரா ஆகியோருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கான்பரா உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள தினுகா கார்மெலின் பெர்னாண்டோ, பாரிஸ் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் சஹஸ்ர பண்டார, மாஸ்கோ தூதரகத்திலுள்ள பந்துல டி சொய்சா, டில்லி உயர் ஸ்தானிகராலயத்திலுள்ள அன்வர் முகமது ஹம்தானி, பெய்ரூட்டிலுள்ள மூன்றாவது செயலாளர் பிரியங்கிகா திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அங்காராவில் இரண்டாவது செயலாளர் யாஸ்மின் ஹில்மி முகமது, நெதர்லாந்தில் உள்ள ஹேக் தூதரக ஆலோசகர் அஷ்வினி ஹபாங்கம, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமிலுள்ள ஜனக ரணதுங்க உள்ளிட்ட அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மேலும் பல நபர்களை மீள அழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.