மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தால் மாகாணசபைத் தேர்தலை தாராளமாக நடத்தலாம். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்
தலை விரைவாக நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கலும் கிடையாது.
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்து மீண்டும் வேட்புமனுக்களை கோருமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
வேட்புமனுக்களை இரத்துச் செய்வதாயின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
ஆகவே சட்டத்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரிய தீர்மானத்தை எடுத்தால் வெகுவரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தலாம்.
மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த காலங்களிலும் பல பரிந்துரைகளை பாராளுமன்ற தெரிவுக் குழுக்களிடம் முன்வைத்துள்ளது.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் சிறந்த முறையில் நடத்தப்பட்டது. தேர்தல் சட்டத் திட்டங்களை பின்பற்றும் நிலையில் மக்கள் உள்ளார்கள்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சித்தலைவர்களுடனும், செயலாளர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட
தீர்மானித்துள்ளோம்.
தேர்தலை நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தினதும், அரசியல் தரப்பினரினதும் பொறுப்பாகும்-என்றார்.