மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் படகுச் சேவைக்கு கட்டணம் அறவிடப்படுகிறது. வறுமை நிலையில் உள்ளவர்கள் தான் படகுச் சேவையை பயன்படுத்துகிறார்கள்.
இந்த படகுச் சேவையை இலவசமாக முன்னெடுப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக மாகாண சபைக்கு நிதி ஒதுக்க முடியுமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திராவிடம் இதற்கான யோசனையை முன்வையுங்கள்.
உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நிதி நிலைமையை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் . முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (18) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்களின் போது உரையாற்றிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை மற்றும் எழுவான்கரை பிரதேசங்களை இணைக்கும் பிரதான பாலமான மண்டூர் – குருமன்வெளி பாலம் நிர்மாணிப்பு மற்றும் மண்முனை தென்மேற்கு, மண்முனை தெற்கு எருவில்பற்று ஆகிய பிரதேசங்களை இணைக்கும் அம்பிளாந்துறை குருக்கள்மடம் பாலம் நிர்மாணிப்பு தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்துள்ள கேள்விகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விடயதானங்களுக்கு உட்பட்டதல்ல, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது.
சாணக்கியன் இராசமாணிக்கம் மக்களின் பிரச்சினைகள் பற்றி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆகவே விடயதானத்துக்கு அப்பாட்பட்டாலும் பதிலளிக்க விரும்புகிறேன்.
மண்டூர் – குருமன்வெளி பாலத்தை நிர்மாணிப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துக்காக படகுச்சேவை முன்னெடுக்கப்படுகிறது.
பாலத்தை நிர்மாணிப்பாற்கு 9 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அம்பிளாந்துறை – குருக்கள்மடம் பாலம் 900 மீற்றர் தூரத்தை கொண்டதாக நிர்மாணிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதுவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விடயதானத்துக்குள் உள்ளடங்காது.
கோறளைப்பற்று – தெற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திகிலிவெட்டை – சந்திவெளி பாலம் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புன்னக்குடா – களுவன்கேணி பாலம் 250 கிலோமீற்றர் தூரத்தை உடையது. இந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு 2 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜய்க்கா நிறுவனம் மட்டக்களப்பு பகுதியில் களப்பு ஊடாக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு கருத்திட்ட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்த கருத்திட்ட வரைபில் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இரண்டு பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், அமைச்சர் குறிப்பிடுவதை போன்று இது மாகாண சபைக்கு உட்பட்ட விடயதானமாயின் ஒருபோதும் மட்டக்களப்பில் பாலங்களில் நிர்மாணிக்கப்படமாட்டாது.
மத்திய அரசாங்கம் மாகாண சபைகளுக்கு வழங்கும் நிதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட போதாது. இதன் காரணமாகவே மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை கோருகிறோம்.
ஜனாதிபதியை அண்மையில் சந்தித்த போது இவ்விடயம் பற்றி பேசினோம். பாலம் நிர்மாணிப்பு விடயதானத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கினால் இந்த அரசாங்கத்தின் பதவி காலத்துக்குள் ஏதேனும் முன்னேற்றகரமாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதியிடம் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் பற்றி பேசுயுள்ளீர்கள்.
முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்படும் என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், பாலம் நிர்மாணிக்கும் வரை இப்பகுதியில் படகுச்சேவை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் படகுச் சேவைக்கு கட்டணம் அறவிடப்படுகிறது.
வறுமை நிலையில் உள்ளவர்கள் தான் படகுச் சேவை யை பயன்படுத்துகிறார்கள். ஆகவே படகுச் சேவையை இலவசமாக முன்னெடுப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக மாகாண சபைக்கு நிதி ஒதுக்க முடியுமா, என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திராவிடம் இதற்கான யோசனையை முன்வையுங்கள். உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நிதி நிலைமையை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.