சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (18) விசேட உரையொன்றை நிகழ்த்தி இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது கடன் மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பவர்கள் அப்போது அந்த யோசனைகளை முன்வைத்திருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றிருக்காது.
அதேநேரம், நபர் ஒருவர் 5 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் போது 6 சதவீதம் வரி அறவிடப்படுகின்றது.
அந்த எல்லையை 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாதாந்தம் ஒரு இலட்சத்து 50,000 ரூபாய் வருமானம் ஈட்டும் ஒருவருக்கு 100 சதவீதம் வரிச் சலுகை வழங்கப்படுகின்றது.
அதேபோன்று 2 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒருவருக்கு வருமானம் ஈட்டும் போது அறவிடப்படுகின்ற வரியில் 71 சதவீதம் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
2 இலட்சத்து 50,000 ரூபாய் வருமானம் ஈட்டும் ஒருவருக்கு வருமானம் ஈட்டும் போது அறவிடப்படுகின்ற வரியில் 61 சதவீதம் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
அத்துடன் 3 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒருவருக்கு வருமானம் ஈட்டும் போது அறவிடப்படுகின்ற வரியில் 47 சதவீதம் வரிச் சலுகை வழங்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மூன்றரை இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒருவருக்கு வருமானம் ஈட்டும் போது அறவிடப்படுகின்ற வரியில் 25.5 சதவீதம் வரிச் சலுகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு அதிக வரிச் சலுகைகளும், அதிக வருமானம் ஈட்டுகின்றவர்களுக்குக் குறைந்த வரிச் சலுகைகளும் கிடைக்கும் வகையில் வருமானம் ஈட்டும் போது அறவிடப்படும் வரியில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தினால் பால்மா மற்றும் யோகட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வற் வரி அறவிடப்பட்டிருந்தது.
எனினும் சிறுவர்களின் போசனை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா மற்றும் யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மதிப்பாய்வின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் சேவை ஏற்றுமதி வரி 30 சதவீதமாகக் காணப்பட்டது.
அதனை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் 15 சதவீதமாகக் குறைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதே சந்தர்ப்பத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வரியை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் மதிப்பாய்வின் போது இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.